அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 21 ஜனவரி, 2009

நபித்தோழர்கள் வாழ்வும்- நமதுநிலையும்[பாகம் 3]

யானை தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டகதையாக, அல்லாஹ்வின் சாபத்தை வழிய கேட்டு வாங்குவதை ஒரு சாதனையாக கருதக்கூடிய நிலையை பார்க்கிறோம். சாபங்கள் பலவகை உண்டு. மனிதர்களின் சாபம், நபிமார்களின் சாபம், மலக்குகளின் சாபம், அல்லாஹ்வின் சாபம். இதில் எந்த சாபத்தை பெற்றாலும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

அதனால்தான் நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒரு மூமின் திட்டுபவனாகவோ,சபிப்பவனாகவோ, கெட்ட செயல் செய்பவனாகவோ, கெட்டவார்த்தைகள் பெசுபவனாகவோ இருக்கமாட்டன் என்றார்கள்.நூல்;திர்மிதி.

சபிப்பது முமீனின் பண்பல்ல என்று தெளிவாக தெரிந்த பின்னும் அடுத்தவர்களை சபிப்பது இன்று சாதாரணமாகி விட்டது. அது மட்டுமன்றி, தான் சொன்ன கருத்தை நிலைநாட்ட முக்காப்புலா[சாரி] முபாகலா எனும் அல்லாஹ்வின் சாபத்தை வேண்டும் நிகழ்ச்சிகளும் அரங்கேறுகிறது. இந்த முபாகலாவிற்கு ஆதாரமாக சொல்லப்படும் வசனத்தை கவனியுங்கள்;

அல்லாஹ்விடம் ஈசாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.அவரை மண்ணால்படைத்து ஆகு என்று அவரிடம் கூறினான்.உடனே அவர் ஆகிவிட்டார்.
இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகிவிடாதீர்!
உமக்கு விளக்கம் வந்தபின் இது குறித்து யாரேனும் உம்மிடம் தர்க்கித்தால் 'வாருங்கள்! எங்கள்பிள்ளைகளையும் , உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம்.நாங்களும் வருகிறோம் நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை கேட்போம்' எனக்கூறுவீராக!3;௫௯ 60.61

இந்த வசனத்தில் நபி ஈஸா[அலை] அவர்களின் பிறப்பு பற்றி எவரேனும் தர்க்கித்தால் முபாகலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு தான் இறைவன் கூறுகிறான். சொந்த பிரச்சினையில் அல்ல. இந்த வசனத்தை வைத்துக்கொண்டு வேறு பிரச்சினைகளுக்கு முபாகலாவுக்கு வாருங்கள் என்று நபி[ஸல்] அவர்களோ, சகாபாக்களோ யாருக்கும் சவால் விட்டதில்லை. முபாகலாவும் நடத்தியதில்லை.

ஆனால் இன்று உலகத்தில் தன்னை தூய்மையானவனாக அடையாளம் காட்டிகொள்வதற்காக தன்னையும், தனது குடும்பத்தாரையும்- எதிரியையும் அவரது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களாக மாற்றுவது எந்த ஆதாரத்தின் அடிப்படையில்! இதில் வேதனை என்னவென்றால் முபாகலா என்றால் என்னவென்றே அறியாத பச்சிளம் குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபத்தை வாங்கித்தருவதுதான்.

தவறு செய்தவரைக்கூட சபிப்பதை நபியவர்கள் தடுத்த செய்தி இதோ;
உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி,எண் 6780

முபாகலாவில் நாம் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள் இல்லையா? அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கக்கூடியவர்கள் இல்லையா? அப்படிப்பட்ட நம் சகோதரனுக்கு/அவனது குடும்பத்துக்கு அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தருவதுதான் ஒரு முமீனின் பண்பா? என்பதை இனியாவது சிந்தித்து அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி சகோதரர்களுக்கு மத்தியில் சாபமிட்டுக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் அருளை வேண்டி பிரார்த்திப்போம்.

கருத்துகள் இல்லை: